யூடியூப் ரீல்ஸ் விளம்பரத்தை நம்பி கொடி ஆடு வாங்க முயன்ற விவசாயி ரூ.3.50 லட்சம் இழப்பு- திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
திருச்சி 31.10.2026

ஆன்லைனில் ஆடு வாங்கி ஏமாந்த திருச்சி விவசாயி..
ரீல்ஸ் விளம்பர வீடியோவை பார்த்து “கொடி ஆடு” வேண்டுமென 3.50 லட்சம் பணத்தை இழந்த விவசாயி- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்ற விவசாயி ரீல்ஸ் விளம்பரம் மூலம் வீடியோ பார்த்து, கொடி ஆடு வளர்ப்பதற்காக கொடி ஆடு இன ஆடுகள் வேண்டுமென தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த youtube பாலகணேசன் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார் அவர் தங்களிடம் நிறைய கொடியாடுகள் விற்பனைக்கு உள்ளது என கூறி விவசாயி மாரிசெல்வம் என்பவரின் ஆடுகள் விற்பனைக்காக உள்ளது எனக் கூறி ரூபாய் 3.50 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பாரம்பரிய கொடி ஆடுகளை வழங்காமல் என்னை ஏமாற்றி மாற்று இன வகை ஆடுகளை என்னிடம் விற்பனை செய்துள்ளனர் இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை எனக்கூறி விவசாயிகள் குறைந்திருக்கும் கூட்டத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் வளர்க்கப்படும் கொடி ஆடுகள் சிறந்த உள்நாட்டு இனங்களாகும். ஆனால், தற்போது சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் சில இடைத்தரகர்கள் மற்றும் போலி பண்ணையாளர்கள் இதனைப் பயன்படுத்தி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.ஆடு வளர்ப்பு என்பது ஒரு நல்ல தொழில், ஆனால் அதைச் சரியான முறையில், முறையான பயிற்சி மற்றும் விழிப்புணர்வுடன் தொடங்கினால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். கொடி ஆடு வளர்ப்பு மற்றும் விற்பனை விளம்பரங்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என்று தமிழக கால்நடை பராமரிப்புத் துறை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோல ரீல்ஸ் விளம்பரங்களை பார்த்து ஏமாறும் விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் இது போன்று புகார் அளித்து வருகின்றனர் இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த விவசாயி இதுபோல மற்ற விவசாயிகளும் ஏமாறக்கூடாது; விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
