திருச்சியில் போதைப்பொருள் கடத்தல் – 7 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கியதால் பரபரப்பு
திருச்சி 26.09.2026

*திருச்சியில் பஞ்சப்பூர் அருகே 7 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கியதால் பரபரப்பு*
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் லாரி டெர்மினல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையிலான காவல்துறையினர் பஞ்சப்பூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அண்ணா லாரி டெர்மினல் கழிவுநீரேற்று நிலையம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய சோதனையிலும் விசாரணையிலும், அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பாஊரணி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23) என்பது தெரியவந்தது. மேலும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் சஞ்சய்யைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.