பெண் அரசு ஊழியரை மிரட்டிய பாஜக நிர்வாகி-நடவடிக்கை எடுக்கக் காவல் துறை தயங்குவது ஏன்? – திருச்சியில் அரசு அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்
திருச்சி – 12.10.2026
திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலக பெண் ஊழியரை பாஜக மாநில இளைஞர் அணி நிர்வாகியும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஒப்பந்ததாரருமான கௌதம் என்பவர் அநாகரிகமான வார்த்தைகளாலும், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
பெண் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மட்டுமல்லாமல், பெண் என்றும் பாராமல் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என்று சொல்லிக்கொள்ளும் தமிழக வெற்றிக்கழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்றைய தினம் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த சம்பவம்தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவிடாமல் அவரை கைது செய்ய வேண்டுமா? அவர்மீது வழக்கு பதிய வேண்டுமா என கேள்வி கேட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுவருவதால் அரசு ஊழியர்களின் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் ஏன் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது என தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பிய வருவாய்துறை அதிகாரிகள், உடனடியாக அவரை கைதுசெய்து தக்கநடவடிக்கை எடுக்காவிட்டால் இன்றைய தினம் ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டம் தொடர் காத்திருப்பு போராட்டமாக மாறும் என அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர்