திருச்சி வழக்கறிஞர் விவகாரம்- ஒற்றுமைக்குக் கிடைத்த முதல் வெற்றி- செசன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அதிரடி மாற்றம்
திருச்சி 13.11.2026
திருச்சி கருமண்டபத்தில் உள்ள அமுதம் ஹோட்டலில் வழக்கறிஞர் திலீபன் உணவு பார்சல் கேட்டபோது ஹோட்டல் காசாளர் ஒருமையில் பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது காவல்துறையினர் லேசான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் ஓட்டல் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் தலைமையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.
வழக்கறிஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த பலனாக விசாரணையில் ஒருபட்சமாகச் செயல்பட்ட செசன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் திருச்சி காவல் சரகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாகக் கூத்தாநல்லூரைச் சேர்ந்த புதிய ஆய்வாளர் எஸ். விஜயகுமார் உடனடியாகப் பொறுப்பேற்று தனது பணிகளைத் தொடங்கியுள்ளார்.
