திருச்சியில் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை-ஒரே நாளில் போலீசார் அதிரடியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி 12.11.2026
திருச்சி மாநகரில் அதிரடி வேட்டை- வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது – 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்காகக் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியமங்கலம், பாலக்கரை மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 1 கிலோ 108 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முல்லை நகர், பாப்பம்மாள் காலனி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்தையா என்பவரின் மகன் முத்துபாண்டி (வயது 23) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 28 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்ஷெட் ரோடு, பாலத்திற்கு அருகில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து சென்று சோதனையிட்டனர் அப்போது மொய்தீன் என்பவரின் மகன் அபூபக்கர் (வயது 44) என்பவர் அங்கு கஞ்சா விற்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 1,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் GH காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிப்பாளையம், அம்மன் கோவில் செல்லும் சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பெரிய அளவிலான கஞ்சா விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நந்தகுமார் என்பவரின் மகன் கீர்த்தீஸ்வரன் @ அரனேஷ் (வயது 22) மற்றும் சியாம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதில் முதல் குற்றவாளியான கீர்த்தீஸ்வரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.050 கிலோ கஞ்சா, ரொக்கம் மற்றும் ஒரு இன்பினிக்ஸ் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி மாநகரில் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
