*எதிர்க்கட்சிகளின் சதிவலைகளை மக்கள் உடைப்பார்கள் – களத்தில் கர்ஜிக்கும் திமுக வேட்பாளர் கதிரவன்*
திருச்சி 11.04.2026
அவதூறுகளை முறியடித்து வெற்றி பெறுவோம் – மண்ணச்சநல்லூரில் கதிரவன் உறுதி
மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருப்பைஞ்ஞீலி, வாழ்மால்பாளையம், குருவம்பட்டி, சிறுகாம்பூர், கிளியநல்லூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில்..
உங்கள் வீட்டுப்பிள்ளை கதிரவனாகிய எனக்கு இந்த முறையும் நீங்கள் உங்கள் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாமுமான ஆட்சி தொடர இந்த முறையும் எனக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில், மாநகரத்திற்கு இணையாகத் தரமானச் சாலைகள், வடிகால் வசதிகள், பேவர் பிளாக் சாலைகள், ரேஷன் கடைகள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், பஸ் நிறுத்தங்கள், பள்ளிக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள், குடிநீர் திட்டங்கள் என ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன்.
அதோடு திமுக அரசின், பெண்களுக்கானத் திட்டங்கள், மாணவ, மாணவிகளுக்கானத் திட்டங்கள், முதியோர்களுக்கானத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிக்கானத் திட்டங்கள், விவசாயிகளுக்கானத் திட்டங்கள் என அத்தனைத் திட்டங்களும் உங்களது ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் சாத்தியமாக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களாகிய நீங்கள் தான். மக்கள் அரசின் இந்த மகத்தான பணிகள் தொடர, எனக்கு நீங்கள் மீண்டும் ஒருமுறை உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவத்துறை சார்ந்த சேவைகளை செய்து வரும் என்னை, அதே துறை சார்ந்து அவமானப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்பது எதிர்தரப்பினரின் கனவாக உள்ளது. அதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். உங்கள் ஒத்துழைப்புடன் அவற்றையெல்லாம் வீழ்த்தி வெற்றி பெற்று எனது கல்வி சேவையும், மருத்துவ சேவையும் நான் உங்களுக்குத் தொடர்ந்து வழங்குவேன்.
மக்களை ஏமாற்றி சம்பாதிக்க, மணலை வைத்து சம்பாதிக்க, மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரால், மக்களின் வரிப்பணத்தை சூறையாட அதிமுகவினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை எனக்கு எந்த ஜாதி, மதமும் கிடையாது. மண்ணச்சநல்லூர் தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவரும் என் உறவினர்கள் தான். நீங்களும் என்னை அப்படித்தான் பார்க்கிறீர்கள். இந்த பந்தத்தை, யார் வந்தாலும் பிரிக்கவே முடியாது.
திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தரை மேல் நீர்த்தேக்க தொட்டி, தனி நபர் புதிய பைப் லைன் அமைத்தல், சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், கழிவுநீர் வடிகால் என 11 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்துக் கொடுத்துள்ளேன். மேலூர் மூவராயன் பாளையம், கீழூர் மூவராயன் பாளையம், கீழூர் மேலூர் வாழ்மால் பாளையம், தெற்கியூர் வாழ்மால்பாளையம் போன்ற பகுதிகளில் 3 கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலைகள், குடிநீர் வசதிகள், தார் சாலை, புதியப் பைப் லைன், மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டிகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். கிளியநல்லூர் ஊராட்சியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வசதி, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, கழிவுநீர் வடிகால் வசதி, சிறிய பாலங்கள் என பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றித் தந்துள்ளேன்.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு கல்வி, மருத்துவம் இரண்டும் மிகவும் முக்கியமானது. அந்த இரண்டையும் எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த வரை வாழ்நாள் முழுவதும் சேவையாகவே அளித்துக் கொண்டிருப்பேன். மீண்டும் தமிழகத்தில், திமுக தலைமையிலான நல்லாட்சி மலரவும் தொடரவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் மகத்தான திட்டங்கள் கொண்டு வருவதற்கும், எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு திமுக வேட்பாளர் கதிரவன் பேசினார்.