பயிர் கடன் தள்ளுபடி கோரிய விவசாயிகள் கைது- கால அவகாசம் கேட்டுவிட்டு இப்போது தவெக அரசின் அடக்குமுறை- விவசாயிகள் வேதனை
திருச்சி 22.10.2026
*சமயபுரத்தில் போராட முயன்ற 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை SRM பல்கலைக்கழகம் அருகே குண்டுகட்டாக கைது செய்த போலீசார்*
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் இன்று முதல் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்த 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் இதே கோரிக்கையை வலியுறுத்தி சமயபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்களத்திற்கு வந்த அமைச்சர்கள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து முடிவெடுக்க 20 நாள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் அமைச்சர்கள் அவகாசம் கேட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று மீண்டும் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்த போராட்டத்தை தடுக்க திருச்சி மாவட்ட எல்லைகளில் சமயபுரம் சுங்கச்சாவடி, சமயபுரம் நால்ரோடு, நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், போராட்டத்தில் பங்கேற்க வந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதனிடையே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் அருகே, SRM பல்கலைக்கழகம் அருகே சாலையோரத்தில் குவிந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
“நாங்கள் சாலையோரமாகத்தான் நிற்கிறோம், எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை” என விவசாயிகள் கூறியதால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருங்களூர் SRM பல்கலைக்கழகம் அருகில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கிச் சென்று, காவல் வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.