” *விடியல் அரசு குடும்பத்திற்கு மட்டுமே; மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்” – ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் மனோகரன் அனல்ப்பறக்கும் பிரச்சாரம்*
திருச்சி
” *விடியல் அரசு குடும்பத்திற்கு மட்டுமே; மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்” – ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் மனோகரன் அனல்ப்பறக்கும் பிரச்சாரம்*
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் துரைராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜ், தமிழக வெற்றி கழகம் சார்பில் ரமேஷ் ஆகியோர் போட்டியிடும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளர் மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மணிகண்டம் வடக்கு ஒன்றியம், புங்கனூர் ஊராட்சி, அரியாவூர் மற்றும் நவலூர் குட்டப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மனோகரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாகச் சென்றார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய மனோகரன் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்:
திமுக ஆட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ உள்ளிட்ட திட்டங்கள் பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், தேர்தலின் போது மட்டுமே திமுகவினர் மக்களைத் தேடி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த ‘விடியல்’ வாக்குறுதிகள் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே நிறைவேறியுள்ளதாகவும், சாமானிய மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்றும் வேட்பாளர் சாடினார்.
பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மனோகரன் பொதுமக்களிடம் விளக்கினார்:
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி கிராமப்புற தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து, சுகாதாரம், பட்டா மாறுதல், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வித தாமதமுமின்றி மக்களுக்கு நேரடியாக வழங்க உறுதியளித்தார்.மத்திய NDA அரசுடன் கூட்டணியில் இருப்பதால், தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பெற்று வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டை. இந்தத் தேர்தலின் மூலம் அதனை மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம். இரட்டை இலைக்கு அளிக்கும் வாக்கு, தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கான வாக்கு,” என்று அதிமுக வேட்பாளர் மனோகரன் நம்பிக்கை தெரிவித்தார்.