இரக்கமில்லாமல் இருக்கும் மாநகராட்சி ஆணையர்- தீபாவளி வரை மட்டும் கடை வைக்க இரக்கம் காட்டுங்கள்-தரைக் கடை வியாபாரிகள் கோரிக்கை
திருச்சி 21.10.2026
திருச்சி மாநகராட்சி முன் தரைக்கடை வியாபாரிகள் திடீர் காத்திருப்பு போராட்டம் – தீபாவளி வியாபாரம் பாதிப்பு என வேதனை
திருச்சி மாநகரின் முக்கிய வணிக பகுதிகளான என்.எஸ்.பி ரோடு, தெப்பக்குளம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் சிறு வணிகம் செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார் காரணமாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சி நிர்வாகம் அவர்களது கடைகள் அனைத்தையும் அதிரடியாக அகற்றியது.
அதனைத் தொடர்ந்து மாற்று ஏற்பாடாக மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் தற்காலிகமாக கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் பல வியாபாரிகளுக்கு இதுவரை கடைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ஆண்டு முழுவதும் தீபாவளி வியாபாரத்தை நம்பியிருக்கும் இவர்கள், என்.எஸ்.பி ரோடு மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் 15 நாட்கள் மட்டும் தற்காலிகமாக கடை நடத்த அனுமதி கோரி, திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.ஆனால் இதுவரை எந்தவித பதிலும், பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் வராததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் மற்றும் ஆணையர் நேரில் வந்து எங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதியான முடிவை அறிவிக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்” என முழக்கமிட்டு போராடி வருகின்றனர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநிலச் செயலாளர் ஜீவா பேசுகையில்..
என்.எஸ்.பி. ரோட்டில் கடைகளை காலி செய்த வியாபாரிகளுக்கு இதுவரை எந்தவிதமான முறையான மாற்று இடமும் ஒதுக்கப்படவில்லை. இந்த 15 நாட்கள்தான் இவர்களின் ஆண்டு முழுவதும் உள்ள வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளவும், வருமானம் ஈட்டவும் உதவும் முக்கியமான காலக்கட்டமாகும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகளோ மெத்தனப்போக்குடன் செயல்பட்டு, முறையான பதிலும் அளிக்காமல் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை முடியும் வரை அடுத்த 15 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக கடைப் போட அனுமதி வழங்க வேண்டும். அதற்குப் பிறகு நாங்களே தாமாக முன்வந்து கடையைக் காலி செய்து கொள்வதாகவும், அதை எழுத்துப்பூர்வமாகத் தரவும் தயாராக உள்ளோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையரும் எங்களை அங்கிருந்து விரட்டிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆணையர் சற்று இரக்கத்துடன் பரிசீலித்து எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.