Trending News Tamil News Website In Trichy

📢 மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு! 3000 பக்தர்களின் பசி தீர்க்கும் ஸ்ரீரங்கம் அன்னதானத் திட்டம் – கேஸ் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! 🔥

0

திருச்சி 26.03.2026

*கேஸ் தட்டுப்பாடு- விறகு அடுப்பிற்கு மாறிய ஸ்ரீரங்கம் கோவில் அன்னதானம் – பக்தர்கள் கவலை*

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில், தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் விறகு அடுப்பில் சமைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இதில் தினசரி சுமார் 3,000 பேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மதிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்குச் சோறு, சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை கூட்டு மற்றும் ஊறுகாய் என அறுசுவையான உணவு பரிமாறப்படுகிறது.

தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் அன்னதானப் பணியை நிறுத்தாமல் தொடர்வதற்காக, கோவில் நிர்வாகம் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

கொரோனா காலத்தில்கூட இத்தகைய சவால்களைச் சந்திக்கவில்லை. தற்போது அன்னதானம் தடைபட்டுவிடுமோ என்ற அச்சமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது என ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விறகு வாங்குவதிலும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்னரே ஆர்டர் கொடுத்தால் மட்டுமே, ஒரு வார காலதாமதத்திற்குப் பிறகு விறகு வந்து சேர்கிறது. தற்போது இருப்பு உள்ள விறகு மற்றும் கிடைக்கும் சொற்ப அளவு கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான போர்ச்சூழல் போன்ற தட்டுப்பாடு விரைவில் நீங்கி, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, ஸ்ரீரங்கம் கோவில் அன்னதானத் திட்டத்திற்குத் தேவையான எரிவாயுவை முன்னுரிமை அடிப்படையில் தங்குதடையின்றி ஒதுக்கித் தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.