Trichy Now செய்தி எதிரொலி- அங்கன்வாடி எதிரே தேங்கிய குப்பைகள் அகற்றம் – மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு
திருச்சி 13.10.2026
Trichy Now செய்தி எதிரொலி -அங்கன்வாடி எதிரே குப்பைகள் அகற்றம் – மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
திருச்சி மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு எதிரே குப்பை கிடங்காக மாறிவிட்ட இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் தெளித்துத் தூய்மைப்படுத்திய திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு Trichy Now வலைதளம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
துரைசாமிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் கல்விக்கூடத்திற்கு எதிரே உள்ள காலியிடத்தில் தொடர்ச்சியாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் என Trichy Now வலைதளத்தில் இன்று காலை செய்தி வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தி உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தேங்கிக் கிடந்த குப்பைகளை முழுமையாக அகற்றி, அப்பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்துத் தூய்மைப்படுத்தினர்.
தற்காலிகத் தீர்வு கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இருக்கும் பொதுமக்கள் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.
வேதா நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே நகரின் பல்வேறு பகுதிகள் அழகுபடுத்தப்பட்டது போல, துரைசாமிபுரம் அங்கன்வாடிக்கு எதிரிலுள்ள இந்த இடத்தையும் ஒரு பியூட்டி பாயிண்ட் மாற்றுவதற்குத் தனியார் நில உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடனடியாகத் தலையிட்டுத் துரித நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் துரைசாமிபுரம் பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக…நம்முடைய இடத்தை நாம் தன் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது போல சுத்தம் செய்த அந்த இடத்தில் இனி அப்பகுதி மக்கள் யாரும் குப்பை கழிவுகளை போட வேண்டாம் எனவும், மாநகராட்சி சார்பில் குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.