Trending News Tamil News Website In Trichy

வேதா நிறுவனத்தால் முடியாததை புதிய மாநகராட்சி ஆணையர் முடித்து வைப்பாரா? – அங்கன்வாடி குழந்தைகளைக் காக்கத் துடிக்கும் பொதுமக்கள்

0

திருச்சி 13.10.2026

திருச்சி மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமிபுரம் மெயின் ரோட்டில் மாநகராட்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளின் கல்விக்கூடத்திற்கு எதிரே உள்ள ஒரு காலியிடம் தற்போது அப்பகுதி பொதுமக்களால் நாளுக்கு நாள் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் தொடர்ந்து அக்காலியிடத்தில் குப்பைகளைக் கொட்டி வருவதால் அங்கு தேங்கும் குப்பைகளைத் தேடிவரும் மாடுகள் மற்றும் நாய்கள், அவற்றை இழுத்துச் சென்று சாலையெங்கும் சிதறடிக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் அந்தச் சாலை முழுவதும் குப்பைக் காடாக மாறிவிடுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்ட போதிலும் தற்காலிகமாக குப்பைகள் அகற்றப்படுவதுடன் சரி நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. பொதுமக்கள் மீண்டும் மீண்டும் அங்கே குப்பை கொட்டுவதால் அங்கன்வாடிக்கு வரும் பிஞ்சுக் குழந்தைகள் முதல் அப்பகுதி பொதுமக்கள் வரை அனைவரும் கடுமையான நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்களும் இங்கு தினந்தோறும் மூன்று முறை வந்து குப்பைகளை அல்லக்கூடிய அவல நிலை தொடர்கிறது. இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் இப்பகுதிக்கான மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான வேதா நிறுவனத்தின் மேற்பார்வையாளரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேதா நிறுவனம் ஏற்கனவே நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று குப்பைக் கொட்டப்படும் 70 இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழகுப்படுத்தி பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றியுள்ளது.

அதேபோல் துரைசாமிபுரம் அங்கன்வாடி எதிரிலுள்ள இந்த இடத்தையும் அழகுபடுத்தித் தர வேதா நிறுவன மேற்பார்வையாளர் முன்வந்துள்ளார். ஆனால் அந்த இடத்தின் தனியார் உரிமையாளர் அனுமதி தந்தால் மட்டுமே இத செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வீடு கட்டும்போது இந்த அமைப்புகளை இடித்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்த ஊழியர்கள் தெளிவுபடுத்தியும் கூட தனியார் உரிமையாளர்கள் அதற்குச் சம்மதிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர்கள் தாமாக முன்வந்து இந்த இடத்தை அழகுபடுத்தவோ அல்லது கம்பிவேலி அமைத்து குப்பை கொட்டுவதைத் தடுக்கவோ அனுமதி வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கண்ணீருடன் கூடிய ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

ஒருவேளை அந்த இடத்தை அழகுபடுத்த உடனடியாக அனுமதியளிக்கப்படாத பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தொடர்ச்சியாகக் குப்பை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு குழந்தைகளின் எதிர்காலமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ள இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகமும், ஆணையரும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் துரைசாமிபுரம் மக்கள் காத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.