Trending News Tamil News Website In Trichy

திருச்சி அதிகாரிகளின் அலட்சியம் -கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லை… புதிய ஆட்சியாவது காப்பாற்றுமா? கழிவுநீரிலும் மழைநீரிலும் சூழந்து தவிக்கும் 100 குடும்பங்கள்

0

திருச்சி 29.09.2026

திருச்சி அதிகாரிகளின் அலட்சியம் -கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லை… புதிய ஆட்சியாவது காப்பாற்றுமா? கழிவுநீரிலும் மழைநீரிலும் சூழந்து தவிக்கும் 100 குடும்பங்கள்

திருச்சி மாவட்டம், No.1 டோல்கேட் அருகே பனையபுரம், பகுதியை சார்ந்த அகலவப்பூர் கிராமம் மற்றும் மாடக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஸ்மோ வில்லேஜ் அவென்யூ பகுதியில் கழிவுநீர் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் சுமார் 100 வீடுகளைச் சுற்றி நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் பாசன நீரும், மழைநீரும் செல்லும் பிரதான வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல், காஸ்மோ வில்லேஜ் அவென்யூவில் உள்ள காலி மனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து தேங்கி நிற்கிறது.

இப்பகுதியில் பிறந்த குழந்தைகள் முதல் பள்ளிச் செல்லும் சிறுவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வசிக்கின்றனர். தேங்கியுள்ள அசுத்த நீரால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற கொடிய காய்ச்சல்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் பாம்பு, தேள், பூரான் மற்றும் பன்றிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்திலேயே வாழும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தெரிவிக்கையில்:

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், காவிரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் மழைநீரும் சேர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தையே முடக்கியுள்ளது.

இந்தத் நீர் வடிய அடுத்த ஆண்டு 2027 ஏப்ரல், மே மாத வெயில் காலம் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. முந்தைய ஆட்சியிலும் இதே நிலைதான் தற்போதைய ஆட்சியிலும் மனுக்கள் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமிலும், லால்குடி ஒன்றிய அலுவலகம் BDO மற்றும் பொதுப்பணித்துறை PWD அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவொரு நிரந்தர தீர்வும் காணப்படவில்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதுடன் சரி அதன்பின் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் உயிர்ச்சேதம் ஏற்படும் வரை காத்திருக்காமல், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட வேண்டும். அடைபட்டுள்ள வாய்க்கால்களை உடனடியாகச் சீரமைத்து, தூர்வாரி நீர் தடையின்றி செல்ல நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.