கம்யூனிஸ்டுகளிடம் ஆதவ் அர்ஜுனா வம்புக்கு வருவது ஏன்? நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை – முத்தரசன் அதிரடி
திருச்சி- 19.09.26
நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு காரணம் யார் ? எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததும் ராஜினாமா செய்ய வைத்ததும் சரியா தவறா என்பதுதான் பிரச்சனை, இதற்கு தான் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் – திருச்சியில் முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக மிக தாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் குறைந்த அளவு நீரே திறந்து விடப்பட்டுள்ளது ஆற்றில் தண்ணீர் செல்கிறது ஆனால் எந்த பயனும் இல்லாமல் செல்கிறது காவிரி ஆறு நிரம்ப தண்ணீர் சென்றால் தான் அது பாசனத்திற்கு பயன்படும்.ஆனால் கோடை காலத்திற்கு இருப்பது போல் குறைந்த அளவு தண்ணீரே செல்கிறது எனவே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை தமிழ்நாடு அரசு கேட்டு பெற வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் மூலமாகவும் பெற வேண்டும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தால் அது மிகப்பெரிய தவறு. விமான நிலையங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதை தனியாருக்கு விடக்கூடாது. மத்திய அரசு, தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதெல்லாம் அதை நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் அப்படி ஒரு கடிதம் எழுதி இருந்தால் அந்த கடிதத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்டுகளிடம் வம்புக்கு ஏன் வருகிறார் என தெரியவில்லை. நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. தமிழ்நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வெளியில் இருந்து இந்த அரசை ஆதரித்துள்ளோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் ஆளுநர் அதற்கு முதலில் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் மூலம் பாஜக ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் அந்த முயற்சியை தடுப்பதற்காக தான் நாங்கள் வெளியில் இருந்து த.வெ.கவை ஆதரித்து ஆட்சியில் அமர்த்தினோம்.
நடைபெற உள்ள இடைத்தேர்தல் எதனால் நடைபெறுகிறது என்பதை ஆதவ் அர்ஜுனா விளக்க வேண்டும். ஓட்டுக்காக வைக்கப்பட்ட மை காய்வதற்கு உள்ளாக அந்த தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கள் பதவி ராஜினாமா செய்துவிட்டு வேறு ஒரு கட்சியில் இணைந்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலை ,குதிரை பேரம் என நாங்கள் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளோம்.இது ஜனநாயகத்தில் கேலிக்கூத்து என உயர் நீதிமன்றமே விமர்சனம் செய்துள்ளது.இந்த கேலிக்கூத்து அணைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலில் ஊழல் யார் செய்தார்கள்? யார் செய்யவில்லை என்பதல்ல பிரச்சினை. ராஜினாமா செய்ததும் ராஜினாமா செய்ய வைத்ததும் சரியா தவறா என்பதுதான் இந்த இடைத்தேர்தலில் பிரச்சனை இதற்கு மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என தான் நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.