Trending News Tamil News Website In Trichy

மகனுக்காக வைகோ செய்த மாபெரும் அரசியல் பிழை- மதிமுகவின் பின்னடைவுக்கு துரை வைகோதான் காரணம் – வைகோ இனி பளபளக்கும் கேடயம் அல்ல… துருப்பிடித்த இரும்பு – மல்லை சத்யா கடும் விமர்சனம்

0

திருச்சி 15.09.2026

*மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விஜய் ரசிகர் மன்ற தலைவரை போல் செயல்படுகிறார் என திராவிட வெற்றி கழக தலைவர் மல்லை. சத்யா குற்றச்சாட்டு*

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிட வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் 9 சான்றோர்களுக்கு ‘திராவிட ரத்னா’ விருது வழங்கும் முப்பெரும் விழா திராவிட வெற்றி கழக தலைவர் மல்லை சத்யா தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் தலைவர் மல்லை சத்யா கூறுகையில்..

 

பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளைப் போற்றும் வகையில், திராவிட இயக்கக் கருத்துகளை முன்னெடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘திராவிட ரத்னா’ விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டுள்ளது. சமூகம், அரசியல், நீதித்துறை, மருத்துவம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய 9 சான்றோர்களுக்கு இவ்விருதுடன் தலா ரூபாய் 1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறியுள்ள சூழலில், ஜனநாயக விரோத போக்கைக் கையாளும் ஆளுங்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 12-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினோம் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு திராவிட வெற்றிக் கழகம் முழு மூச்சாகப் பாடுபடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மதிமுக தலைவர் வைகோவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர் திராவிட இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்த வைகோ, இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ரசிகர் மன்றத் ணதலைவரைப் போலப் பேசிக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. தன் மகனுக்காக மிகப்பெரிய அரசியல் பிழையை வைகோ செய்துவிட்டார். இதனால் ஆயிரக்கணக்கான தோழர்களையும் நிர்வாகிகளையும் இழந்து, அவர் தனிமரமாக நிற்கிறார்.வைகோவின் மகன் துரை வைகோ வருகைக்குப் பிறகு, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டிய கட்சி கழித்தல் கணக்கில் கரைந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலரும் கட்சியிலிருந்து விலக நேரிட்டது.சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படும் தலைவராக வைகோ மாறியுள்ளார். ஒருகாலத்தில் பளபளப்பாக இருந்த கேடயம் இன்று துருப்பிடித்துவிட்டது.

திருச்சியில் எம்பி தொகுதியைப் பெறுவதற்காக, பின்நாட்களில் மதிமுகவை திமுகவுடன் இணைப்பேன் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்தவர் துரை வைகோ வலதுசாரி மற்றும் கார்ப்பரேட் சிந்தனை கொண்டவர் என்பதால் தனக்கு வெற்றி தேடித்தந்த திமுகவையே கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.தற்போதைய சட்டமன்றம் கேள்வி கேட்கும் மன்றமாக இல்லாமல், சண்டை மன்றமாகவும் கேளிக்கை மன்றமாகவும் மாறியிருப்பது வருத்தத்திற்குரியது.

கடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் வளர்ச்சியில் ஆறாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது ஏறக்குறைய 14வது இடத்திற்கு சென்று விட்டது இந்த 120 நாள் ஆட்சியில் தமிழ்நாடு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. பொருளாதாரத்திலும் வரலாற்று திட்டங்களிலும் எல்லா நிலையிலும் தமிழ்நாடு பின்தங்கி நிலையில் இருக்கிறது.இதை மீட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் சென்றுள்ளார் முதலீடுகளை கொண்டு வருகிறார் என்றால் அதை நாங்கள் வரவேற்கிறோம். விசிக ஏற்கனவே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஒன்றுதான். தற்போதைய சூழலில் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காகவே திமுக மீது அவதூறுகளைப் பரப்புகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.