திருச்சியில் அதிர்ச்சி- தீபாவளிக்கு வாங்கிய 5 கிலோ இனிப்புகள் கெட்டுப்போனதாகப் புகார் – பிஜி நாயுடு ஸ்வீட் கடை முன்பு வாடிக்கையாளர் வாக்குவாதம்
திருச்சி 10.11.2026
கெட்டுப்போன இனிப்புகளை விற்பனை செய்த ஸ்வீட் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர் கோரிக்கை..
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் தீபாவளி முன்னிட்டு தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், இனிப்புகளை வழங்குவதற்காக கடந்த 7ம் தேதி இரவு திருச்சி மேலபுத்தூரில் உள்ள பிஜி நாயுடு ஸ்வீட் கடையில் 5 கிலோ கலவை இனிப்புகள் வாங்கியுள்ளார். இதனை தீபாவளி அன்று நண்பர்களுக்கு வழங்கினார். அந்த ஸ்வீட் பாக்ஸில் பூஞ்சான் படர்ந்து காணப்படுவதாகவும், இதனை யாருக்கும் வழங்க வேண்டாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் ஸ்வீட் மற்றும் அதற்கான பில்லுடன் ஸ்வீட் வாங்கிய கடைக்கு சென்றார். அப்போது அந்த கடை மூடியிருந்த நிலையில் மீண்டும் நேற்று கடைக்கு சென்று தங்களது நிர்வாகத்தின் கவனக்குறைவால் பூஞ்சான் படர்ந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை எடுத்து கூறினார். மேலும் இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் நேரடியாக புகார் அளிக்க வேண்டுமென வாடிக்கையாளர் தெரிவித்தார்.விழா காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறுவது தவிர்க்க இயலாத ஒன்று , தங்களுக்கு மாற்று ஸ்வீட் வழங்க ஏற்பாடு செய்வதாக கடையின் மேற்பார்வையாளர் தெரிவித்தார். தங்களது தவறை ஏற்றுக்கொள்ளாத ஸ்வீட் கடை நிர்வாகத்தின் மெத்தன போக்கால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், ஸ்வீட் கடை மேற்பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் பூஞ்சான் படர்ந்த கெட்டு போன ஸ்வீட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வாடிக்கையாளரிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கமாறு கூறி அங்கிருந்து சென்றனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
