பைக் டாக்ஸியால் பறிபோகும் சவாரிகள், பைக் டாக்ஸிக்கு தடை கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி 26.10.2026
திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்- பைக் டாக்சிக்கு தடை கோரி 500-க்கும் மேற்பட்டோர் மனு
முறையான அனுமதியின்றி இயக்கப்படும் பைக் டாக்சிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி கூறுகையில்…அனுமதியின்றி இயக்கப்படும் பைக் டாக்சிகள் மற்றும் ஆன்லைன் செயலிகளால் தங்களுக்கு சவாரிகள் கிடைப்பதில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். உயர்ந்துவரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும். அரசு இலவசங்களை வழங்குவதை விடுத்து ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முறையான வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மானியங்கள் வழங்கி எங்களது உழைப்புக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் வாங்கிய கடனை இன்று வரை அடைக்க முடியாமல் தவித்து வருகிறோம். சமீபத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எங்களுக்கு மிகுந்த மன வேதனை தந்துள்ளதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மலைக்கோட்டை மாநகர சங்கத்தின் தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
