தடையை மீறி கள் விற்பனை செய்யப்படும்-தைரியம் இருந்தால் தடுத்து பாருங்கள்-தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கள் நல்லசாமி சவால்
திருச்சி, 6.09.2026
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் ‘கள்’ நல்லசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்..
தமிழகத்தில் காவிரி விவகாரம் தீர்ப்பு குறித்தும், கள்ளுக்கான தடை குறித்தும் ஆளும் அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் புரிதல் இல்லை. கடந்த 36 ஆண்டுகளில் கர்நாடகா, தமிழகத்துக்கு ஒரு முறை கூட, உரிமைப்படி நீரை திறக்கவில்லை. மாறாக அணை பாதுகாப்பை மையப்படுத்தியே திறந்துள்ளது. இலக்கு இல்லாமல் வழக்கு நடத்தி மாதாந்திர பங்கீடு தீர்ப்பை பெற்றதால்தான் காவிரி பிரச்னையில் இன்று தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, காவிரி நடுவர் மன்றத்தில் தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் சுப்ரீம்கோர்ட்டையும், அங்கு நியாயம் கிடைக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியின் 40 எம்பிக்களும் சேர்ந்து பார்லிமென்ட்டை முடக்க வேண்டும். தற்போதைய காவிரி தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என இடதுசாரி, வலது சாரி, தேசிய, மாநில கட்சிகள் யாராவது நிரூபித்தால், கூட்டமைப்பு சார்பில் ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.
அண்டை மாநிலங்களில் எங்கும் கள்ளுக்கு தடையில்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். கலப்படத்தை தவிர்க்க முடியவில்லை என்று காரணம் கூறினால், மற்ற மாநிலங்களில் எப்படி தடுக்கின்றனர்.
அப்படியானால் ஆளுமை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கள் பிரச்னையில், தமிழகத்தில் கள்ளுக்கான தடை சரி. அது உணவுப்பொருள் இல்லை, போதைப்பொருள் என எம்எல்ஏக்கள் யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு இனோவா காரும், மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் நிரூபித்தால் ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும். அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைப்படி கள் இறக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், 2027 ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதம் கள் இறக்கி சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழக அரசுக்கும், போலீசுக்கும் தைரியம் இருந்தால் எங்களை தடுக்கட்டும் என நல்லசாமி கூறினார்.