Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் பரபரப்பு- வீட்டில் லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின் வைத்து போலி லாட்டரி விற்ற வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது

0

திருச்சி 21.10.2026

திருச்சி அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளைப் போலியாக அச்சடித்து பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த வழக்கறிஞர் உள்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து லேப்டாப், ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மாவட்ட எஸ்பி உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டது.

இதையடுத்து, சோமரசம்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணசேகரன் தலைமையிலான போலீசார், உய்யக் கொண்டான் திருமலை சண்முகா நகர் 15-வது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு லேப்டாப், ஜெராக்ஸ் இயந்திரம், கலர் பிரிண்ட் தாள்கள், கேரள லாட்டரி சீட்டின் பெயரிலான போலி சீட்டுகள் மற்றும் ரூ. 1,28,450 ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவ்வீட்டின் உரிமையாளரான திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழரசன் (41), குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் மீரான் (42), மற்றும் கரூர் மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (42) ஆகிய மூன்று பேரும் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இவர்கள் திருச்சியில் உள்ள ஒரு வீட்டில் போலி லாட்டரி சீட்டுகளைத் தயாரித்து, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்துள்ள சோமரசம்பேட்டை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் போலி லாட்டரி அச்சடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.