Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் அதிர்ச்சி- ரயில் நிலையத்தில் பயணியை அருவாளால் வெட்டிய வழக்கில் 2-வது குற்றவாளி அதிரடி கைது

0

திருச்சி 17.10.2026

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் பயணியை வெட்டிய வழக்கில் 2-வது நபர் அதிரடி கைது – தலைமறைவான மற்றொருவனுக்காக வலைவிரிப்பு

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் மங்களூர் விரைவு வண்டி பயணியை அருவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2-வது குற்றவாளியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுக்கோட்டை நீலா காம்ப்ளக்சைச் சேர்ந்த கோவிந்தராசு (46), கடந்த அக்டோபர் 12 அன்று திருப்பூரிலிருந்து மங்களூர் விரைவு வண்டியின் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வந்து இறங்கினார்.

அப்போது ரயில் நிலைய நடைமேடையில் போதையில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கோவிந்தராசு மற்றும் அவரது நண்பர் மகாதேவனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் திடீரென மறைத்து வைத்திருந்த அருவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

இத்தாக்குதலில் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணைந்து குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இவ்வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான திருச்சி வாமடத்தைச் சேர்ந்த தங்ககுமார் (27) என்பவரை அக்டோபர் 15 அன்று காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்து வந்த இரண்டாம் குற்றவாளியான திருச்சி வாமடத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற எலி மாரியப்பன் (23) என்பவரை இன்று காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாரியப்பனை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியையும் விரைவில் கைது செய்ய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.