திருச்சி இரயில் நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் -ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 24 கிலோ குட்கா பாக்கெட்டுகள் சிக்கின
திருச்சி 2.10.2026
*திருச்சி இரயில் நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் -ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 24 கிலோ குட்கா பாக்கெட்டுகள் சிக்கின*
திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்து சோதனையின் போது, ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 24 கிலோ எடை கொண்ட குட்கா போதைப்பொருள் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
(02/10/2026) திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு ரோந்துப் பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் (517) கண்ணதாசன், காவலர்கள் (950) ரெங்கபாஷ்யம் மற்றும் (1560) ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய படைக் குழுவினர் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். டெல்லி நிஜாமுதீனில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி’ விரைவு ரயிலில் (வண்டி எண்: 12652) தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா எனப் பயணிகளின் உடைமைகளை காவலர்கள் ஆய்வு செய்தனர். இரவு 21.25 மணியளவில் ரயில் திருச்சி இரயில் நிலைய நடைமேடை எண் 4-ஐ வந்தடைந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரயிலின் பின்புறம் உள்ள பொதுப் பெட்டியின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த தோள்பை, முன்புற பொதுப் பெட்டியின் இருக்கைக்குக் கீழே இருந்த 2 சாக்கு பைகள் ஆகியவை சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டுச் சோதிக்கப்பட்டன. அதில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 24 கிலோ ஆகும். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் உடனடியாகச் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட 24 கிலோ குட்கா பாக்கெட்டுகள் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இக்கடத்தலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.