பயிர் கடன் தள்ளுபடி கேட்டு சமயபுரம் வந்த விவசாயி வழியிலேயே மூச்சுத்திணறலால் உயிரிழப்பு
திருச்சி 19.09.2026
பயிர் கடன் தள்ளுபடி போராட்டம் திருச்சி வந்த கரூர் விவசாயி மூச்சுத்திணறலால் பரிதாப பலி சோகத்தில் விவசாயிகள்..
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ச்சியாகத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்… இந்நிலையில், இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காகக் கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள முனியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயி வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்….
அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது உடனடியாக அவர் ‘நம்பர் 1 டோல்கேட்’ பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காகத் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்….
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தனது விவசாய நிலத்தின் கடன் சுமையால் தவித்து, அதற்கான தீர்வை நோக்கிப் போராட்டக்களத்தை தேடி வந்த ஒரு விவசாயி, களத்தை அடையும் முன்பே வழியிலேயே தன் இன்னுயிரைத் துறந்த இச்சம்பவம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..