திருச்சி கலைக்காவிரியில் மாநில அளவிலான CLASSIC FEST – 2026 – வலைதள எதிர்மறை வேண்டாம்… கலைத் திறமையை வெளிப்படுத்துங்கள் – மாணவர்களுக்கு IG பாலகிருஷ்ணன் IPS அறிவுரை
திருச்சி 11.09.2026
*திருச்சி கலைக்காவிரியில் மாநில அளவிலான ‘கிளாசிக் ஃபெஸ்ட் – 2026 -IPS அதிகாரி பாலகிருஷ்ணன் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை*
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான ‘CLASSIC FEST – 2026’ நுண்கலைப் போட்டி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கலை வழி சமய நல்லிணக்கம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இவ்விழாவில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார் முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்தனர்.திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்…. சோழர் காலத்தில் கலை மற்றும் இலக்கியம் சிறந்து விளங்கியதற்கு அமைதியான ஆட்சியே காரணம். காவலத்துறை அமைதியை நிலைநாட்டும் இடங்களில் கலையும் இலக்கியமும் செழித்து வளரும்.கலைக்கும் இசைக்கும் மனித மனதை ஒருமைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. நுண்கலைகள் மனித ஆற்றலைச் சுத்தப்படுத்தி, நேர்மறையான ஆற்றலாக மாற்றுகின்றன.
நுண்கலையைத் தேர்ந்தெடுத்துப் பயிலும் மாணவர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அரசுப் பணிகள் மட்டுமின்றி, கலை மற்றும் இசைத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
இளைஞர்கள் சமூக வலைதளங்களில் உள்ள எதிர்மறை விஷயங்களைத் தவிர்த்து, தங்களின் தனித்துவமான கலைத் திறமைகளை வெளிப்படுத்தவும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் அதைப் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி நுண்கலைத் துறையில் நிபுணர்களாக உயர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் செவ்வியல் நடனம், செவ்வியல் குரலிசை, மெல்லிசை, கருவியிசை, தாளக்கருவியிசை, ரங்கோலி, வண்ண ஓவியம் மற்றும் நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் முனைவர் கி.சதீஷ் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வேங்கடலட்சுமி முனைவர் லட்சுமி, முனைவர் அபர்ணா பிரீத்தா ஜோசப் பேட்ரிக் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.