திருச்சி சிறப்பு முகாமில் பரபரப்பு- நைஜீரிய பெண் தற்கொலை முயற்சி- இலங்கை தமிழர்கள் 5 பேர் மாத்திரை சாப்பிட்டு போராட்டம்
திருச்சி 8.09.2026
*திருச்சி சிறப்பு முகாமில் பரபரப்பு- நைஜீரிய பெண் தற்கொலை முயற்சி- இலங்கை தமிழர்கள் 5 பேர் மாத்திரை சாப்பிட்டு போராட்டம்*
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி பாஸ்போர்ட் பயன்பாடு, விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் இலங்கை, இந்தோனேஷியா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக்காலம் முடிந்த பின்னரும் தங்களை முகாமிலேயே அடைத்து வைத்திருப்பதாகக் கூறியும், உடனடியாகத் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வலியுறுத்தியும் இங்குள்ளவர்கள் அவ்வப்போது உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இம்முகாமில் தங்கியுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆயிஷா (34) என்ற பெண்மணி, அங்கிருந்த மரத்தில் ஏறித் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.அதேவேளையில், தங்களைச் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கக் கோரி இலங்கையைச் சேர்ந்த 5 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கே.கே.நகர் காவல் துறையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆம்புலன்ஸுடன் உடனடியாகச் சிறப்பு முகாமிற்குச் சென்றனர். அங்குத் தற்கொலைக்கு முயன்ற ஆயிஷா மற்றும் தூக்க மாத்திரை சாப்பிட்ட 5 பேருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்துக் கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.