திருச்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது- எம்.பி. கிறிஸ்டோபர் திலக், மாவட்ட தலைவர் ரெக்ஸுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா போராட்டம்
திருச்சி 5.09.2026
*திருச்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது- எம்.பி. கிறிஸ்டோபர் திலக், மாவட்ட தலைவர் ரெக்ஸுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா போராட்டம்*
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிக்குள் பூசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட உண்மை காங்கிரஸ் தொண்டர்கள், திருச்சி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் ஆகியோருக்கு எதிராக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், மாவட்ட தலைவர் ரெக்ஸுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தொண்டர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பின்னணியில் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் செயல்பட்டு வருவதாகவும், அவரே ஒருதரப்புக்கு ஆதரவாக வழிநடத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மண்டல பார்வையாளர் தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம் என மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும், மகளிர்க்கான இடஒதுக்கீடு, எஸ்சி/எஸ்டி மற்றும் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் போன்ற எந்தவித கட்சி விதிமுறைகளையும் பின்பற்றாமல் தேர்தல் நடத்த முயற்சிப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒருதலைப்பட்சமாக செயல்படும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும். தொண்டர்களை மிரட்டும் மண்டல பார்வையாளர்களை நீக்கிவிட்டு, நடுநிலையான புதிய பார்வையாளரை நியமிக்க வேண்டும்.கட்சி விதிமுறைகள் மற்றும் இடஒதுக்கீடுகளை சரியாக பின்பற்றி நேர்மையான முறையில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி மாநகர வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை கண்டித்து நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆகியோரை கண்டித்து மாவட்ட தலைமை அலுவலகத்திலேயே காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்பதே எங்களின் லட்சியம். அதற்கு நாங்கள் அனைவரும் இணைந்து பாடுபடத் தயாராக இருக்கிறோம். ஆனால், எம்பி கிறிஸ்டோபர் திலக் மற்றும் மாவட்ட தலைவர் ரெக்ஸ் ஆகியோருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக தேர்தலை நடத்தப் பார்க்கிறார்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லாமல் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே, நடுநிலையான பார்வையாளரை நியமித்து, ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.