தேசிய ஜூடோ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை! அரசு கைகொடுக்குமா?
திருச்சி 11.05.2026
*தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை-அரசு உதவிக்கு கோரிக்கை*
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூடோ போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12 தங்கப் பதக்கங்களை வென்று பெரும் சாதனை படைத்துள்ளனர். கோவாவில் கடந்த மே 09.05.2026 மற்றும் 10.05.2026 ஆகிய இரண்டு தேதிகளில் தேசிய அளவிலான ஜூடோ (மல்யுத்தம்) போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் தமிழகத்தின் சார்பில் திருச்சியிலிருந்து பங்கேற்ற 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி, பல்வேறு பிரிவுகளில் 12 தங்கப் பதக்கங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டோர் ஜூனியர் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இது குறித்து தமிழக ஜூடோ அணியின் பயிற்சியாளர் பிரசாந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்.. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இந்த மாணவர்கள் தேசியப் போட்டிக்குத் தேர்வாகி கோவா சென்றனர். கடினமான போட்டிகளுக்கு இடையே எங்கள் மாணவர்கள் முதலிடம் பிடித்துத் தங்கம் வென்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்கள் அனைவரும் எளிய மற்றும் நடுத்தர குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான பயணச் செலவு மற்றும் இதரத் தேவைகளுக்கே ஸ்பான்சர்கள் இன்றி மிகுந்த சிரமப்பட்டனர்.தமிழக அரசு இந்த மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து உதவித்தொகை வழங்க வேண்டும்.வருங்காலங்களில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தேவையான நிதி மற்றும் பயிற்சிக் கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என பயிற்சியாளர் கோரிக்கை வைத்தார்.