திருச்சி 18.03.2026

*திருச்சியில் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் வண்ணமயமான ரங்கோலி நிகழ்வு நடைபெற்றது*

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வண்ணமயமான ரங்கோலி கோலங்களை வரைந்திருந்தனர். “எனது வாக்கு, எனது உரிமை”, “நிச்சயம் வாக்களிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய இந்த கோலங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான சரவணன் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்தி, எவ்வித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்போம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ‘விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்’ தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்களது கையெழுத்துக்களைப் பதிவு செய்து நிகழ்வை தொடங்கி வைத்தனர். அதேபோல் அரசுப் பேருந்துகள் மற்றும் அரசுத் துறை வாகனங்களில் “மறவாமல் வாக்களிப்போம்” என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அதிகாரிகள் ஒட்டினர்.

தொடர்ந்து… வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தை 100% வாக்குப்பதிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதே இந்த நிகழ்வுகளின் அடிப்படை நோக்கம் என தெரிவித்தனர்.