முதலீட்டை ஈர்க்க லண்டன் போனா.. வேற யாரோடவோ போட்டோ வருது– முதல்வரை பங்கமாக கலாய்த்த எடப்பாடி பழனிசாமி
திருச்சி- 13.07.26
திருச்சி அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
தமிழுக்குச் சொந்தக்காரராய், அற்புதமாக மணமக்களை வாழ்த்தி அமர்ந்திருக்கக்கூடிய கவியரசர், அண்ணன் வைரமுத்து அவர்கள், மணமக்கள் சிறப்பாக எப்படி இருக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதைத் தங்களின் பேச்சால் எடுத்துரைத்துள்ளார்.
வைரமுத்து பேசுகையில், ‘நான் எப்போதும் திமுக மேடையில் இருந்துள்ளேன், இப்பொழுது அதிமுக மேடையில் இருக்கிறேன்’ என்றும் பேசினார்.
அவர் யாருக்கும் சொந்தமானவர் அல்ல. கவியரசர் நம் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் எழுதிய பாடல்கள் என்றென்றும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுள்ளன.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சாலையில் விளையாடும் சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல தவெக வினர் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். இதனால் தான் இடைத்தேர்தல் வந்துள்ளது. அந்த இரண்டு பேரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். குதிரை பேரம் மூலம் விலை பேசி தவெக தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அவர்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
த.வெ.க ஆட்சி சொந்த காலில் நிற்கவில்லை, இரவல் காலில் தான் நிற்கிறது. ரீல்ஸ் மூலமாக வந்த இந்த ஆட்சி ரீல் விட்டே நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு எதுவும் செய்யாமல் உழைக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி த.வெ.க தான்.தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை தவெக நிறைவேற்றப்படவில்லை. 32 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம்.தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் என்ற செய்தியை இன்று காலை பார்த்தேன். அதில் புகைப்படம் மாறி வந்துள்ளது. அவர் யாருடன் தொழில் முதலீட்டை இருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் தொடர்ச்சியாக மின்வெட்டு இருந்து வருகிறது. மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும்போது இந்த அரசு அதற்கு செவி சாய்ப்பதே இல்லை என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி,
த.வெ.க குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள் அதனால் தான் தற்பொழுது மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் வந்துள்ளது. நிச்சயம் மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்.சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் மக்கள் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குதிரை பேரம் மூலமாக அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய வைத்தார்கள். அதனால் தான் இடைத்தேர்தல் வந்துள்ளது அதிமுக சார்பில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தவர்களையே த.வெ.க வேட்பாளர்களாக அறிவித்துள்ளது மக்கள் நிச்சயம் அவர்களை தோற்கடித்து அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்.தமிழகத்தில் 10 லட்சம் கோடி கடன் உள்ளது புதிய திட்டங்கள் அறிவிப்பதில் சிக்கல் உள்ளது என த.வெ.க அரசு கூறியது ஆனால் தற்போது புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். தேர்வு செய்த இடம்சரியில்லாத இடம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவசர கதியில் அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. நிதி நிலை சீரான பின் சரியான இடத்தை தேர்வு செய்து தலைமை செயலகம் கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் திறமையற்றவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் நான் பதில் அளிக்கும் போது யாரும் ஓடிவிடக்கூடாது என கூறி விட்டு முதல்வர் ஓடி விட்டார். நாங்கள் வைத்த கேள்விகளுக்கு எந்த பதிலும் முதலமைச்சரிடம் இருந்து வரவில்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறினார்கள். ஆனால் அது தொடர்பான புகைப்படம் எதுவும் இதுவரை வரவில்லை. வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது.த.வெ.க ஆட்சியை மோசமான ஆட்சியாக தான் பார்க்கிறோம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் மக்களுக்கு துன்பம் தான் உள்ளது. இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக பின்பற்றும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார் என்கிற கேள்விக்கு அவர் அந்த பார்முலாவை முதலில் பின்பற்றாமல் இருக்கட்டும் என பதில் அளித்தார்.