திருச்சி பிரணவ் கேஸ்ட்ரோ சென்டரில் மாதந்தோறும் இலவச கல்லீரல் மாற்று சிகிச்சை முகாம்- முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் பலன் பெறும் ஏழை எளிய மக்கள்
திருச்சி 14.10.2026
திருச்சி தில்லைநகர் பிரணாவ் கேஸ்ட்ரோ செண்டர் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சென்னை கிளெனீகல்ஸ் குளோபல் மருத்துவமனை கல்லீரல் சிறப்பு மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் கதிரேசன் தலைமையில் மாதந்தோறும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திருச்சி தில்லைநகர் மேற்கு 7வது குறுக்கு தெருவில் உள்ள பிரணாவ் கேஸ்ட்ரோ சென்டர் மருத்துவமனையில், கல்லீரல் மற்றும் கணைய நல சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் பிரதி மாதம் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாதத்திற்கான முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் சென்னை கிளெனீகல்ஸ் குளோபல் (Gleneagles Global) மருத்துவமனையின் கல்லீரல் சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கதிரேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மிகவும் பெயர்பெற்றது.
குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 5 முதல் 6 நோயாளிகளுக்கு இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவையை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை அன்று திருச்சி பிரணவ் கேஸ்ட்ரோ சென்டருக்கு வந்து சிகிச்சை ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். திருச்சியிலிருந்து இதுவரை சுமார் 15 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் சிறு குழந்தைகள் ஆவர். குறிப்பாக, ஒரு வயதுக்கும் குறைவான 3 குழந்தைகளுக்கு பிறவி மரபணு கோளாறால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்புக்கு, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர்கள் இதே பிரணவ் கேஸ்ட்ரோ சென்டரில் தொடர்ந்து பரிசோதனை பெற்று நலமுடன் உள்ளனர்.
மஞ்சள் காமாலை உள்ள அனைவருக்குமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமா:.
மஞ்சள் காமாலை உள்ள அனைவருக்குமே மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. முதலில் மஞ்சள் காமாலை எதனால் வந்தது என்பதைக் கண்டறிவதுதான் முதன்மைப் பணியாகும். ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் மூலமாகவே நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று பார்ப்போம். ஆனால், நோய் முற்றி வயிறு வீக்கம், கால் வீக்கம், இரத்த வாந்தி, சுயநினைவை இழத்தல் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தோன்றி, ஐ.சி.யூ-வில் அடிக்கடி அனுமதிக்கப்படும் நிலைக்கு செல்லும்போது கல்லீரல் முழுமையாக செயலிழந்து விடுகிறது. அந்த மாதிரியான தீவிர கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகுமே, நடுத்தர மக்களால் இதைச் செய்ய முடியுமா:.
கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பெரிய தொகை செலவாகும் என்ற பொதுவான ஒரு தவறான கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முதலில் நோயாளியை கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர், இரைப்பை குடல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர், உளவியலாளர் மற்றும் பொது மருத்துவர் என 10 முதல் 15 மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதித்து ‘பிட்னஸ்’ வழங்க வேண்டும். இந்த ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் மற்றும் ஒர்க்-அப் செலவுகள் மட்டுமே சுமார் 1 முதல் 1.5 லட்சம் வரை ஆகும். இதன்பிறகு, அரசிடம் காப்பீட்டுத் திட்ட ஒப்புதல் பெறப்பட்டு, ஆபரேஷன் தொடங்கி டிஸ்சார்ஜ் ஆனது வரை முதல் இரண்டு வருட மருந்து செலவுகள் உட்பட 20 லட்சத்திற்கு மேற்பட்ட செலவுகளை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, இது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற பயம் தேவையில்லை; காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களும் பயனடையலாம்.
கல்லீரல் தானம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பானதா. மீண்டும் கல்லீரல் வளர்ந்துவிடுமா:.
நமது உடலிலேயே மிகவும் அதிசயமான உறுப்பு கல்லீரல் மட்டும்தான். நகம் மற்றும் கூந்தல் போல, கல்லீரல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. எனவே, குடும்பத்தில் உள்ள இரத்த உறவினர் ஒருவர் தனது கல்லீரலில் பாதியை (சுமார் 60%) தானமாக வழங்கினால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளேயே தானம் செய்தவரின் கல்லீரல் பழைய அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக முழுமையாக வளர்ந்துவிடும்.
யார் தானம் செய்யலாம்:.
18 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட, சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் இல்லாத ஆரோக்கியமான இரத்த உறவினர்கள் மட்டுமே அரசாங்கத்தின் முறையான ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு கல்லீரல் தானம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது ஒரு பெரிய அறுவை சிகிச்சையாக இருந்தாலும், 99.99% பாதுகாப்பானது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் 5 நாட்களில் டோனர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, ஒரு மாதம் வரை மருத்துவமனை அருகிலேயே தங்க வைக்கப்பட்டு, ஸ்கேன் மூலம் கல்லீரல் வளர்ச்சியை உறுதிசெய்த பின்னர்தான் ஊருக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.