நோயாளிகள் படும் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மக்கள் அதிகாரம் வலியுறுத்தல்
திருச்சி 3.10.2026
*திருச்சி அரசு மருத்துவமனை அவலநிலை- அடிப்படை வசதிகளை சீரமைக்க மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தல்*
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றினை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையிலுள்ள 4 லிஃப்டுகளில் ஒன்று பழுதாகியும், மற்றொன்றில் பொருட்கள் மற்றும் கழிவுகள் எடுத்துச் செல்லப்படுவதாலும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.
இருதய மற்றும் நரம்பியல் புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வரும் நிலையில், போதிய மின்விசிறிகள் மற்றும் காற்றோட்டம் இல்லாமல் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.
இருதய மற்றும் நரம்பியல் புறநோயாளிகள் பிரிவை வாரம் 3 நாட்கள் என்பதிலிருந்து 6 நாட்களாக உயர்த்த வேண்டும். மேலும் மயக்கவியல் மருத்துவர்களின் பணி நேரத்தை (காலை 8.00 – மதியம் 12.30 வரை) அதிகரிக்க வேண்டும்.கரூர், அரியலூரிலிருந்து சுழற்சி முறையில் செவிலியர்கள் வரவழைக்கப்படும் நிலையை மாற்றி, போதுமான நிரந்தரச் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
கழிப்பறைகளில் தண்ணீர் வீணாவது, கழிவுகள் அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுவது, எழும்பு முறிவு பிரிவில் ‘வெஸ்டர்ன்’ கழிப்பறை இல்லாதது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஸ்கேன் மையம் உட்பட அனைத்துத் தளங்களிலும் தடங்கலின்றி குடிநீர் கிடைக்கத் தனி நபர்களை நியமிக்க வேண்டும்.மருத்துவமனையின் குறைகளைக் கண்காணிக்கச் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள் அடங்கிய ‘மக்கள் நலக் குழு’வை அமைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசு திருச்சி அரசு மருத்துவமனைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கி, இந்த அடிப்படைச் சிக்கல்களை விரைந்து தீர்க்க வேண்டும்.தவறும் பட்சத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மாநில பொதுச் செயலாளர் தோழர் திருச்சி செழியன் தெரிவித்துள்ளார்.