டிசம்பர் 27-ல் ‘தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு’ மாநாடு: திருச்சியில் நீர்நிலை செயற்பாட்டாளர்கள் கருத்தரங்கில் முடிவு
திருச்சி 14.11.2026
டிசம்பர் 27-ல் ‘தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு’ மாநாடு – நீர்நிலை செயற்பாட்டாளர்கள் கருத்தரங்கில் முடிவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் புனரமைத்து மாநிலத்தை நீர் வளம் காக்கும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் வரும் டிசம்பர் 27-ம் தேதியன்று திருச்சியில் ‘தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு’ மாநாடு நடைபெறவுள்ளது. திருச்சி பனானா லீப் கூட்டரங்கில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் எஸ். செந்தூர்பாரி தலைமையில் நீர்நிலை செயற்பாட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நல்லோர் வட்டம், பாலு ஒளிரும் ஈரோடு நிர்வாகிகள், அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குநர் சின்னுசாமி, எம்சிஆர் வேட்டி நிறுவனர் எம்.சி. ராபின், பனானா லீப் ஹோட்டல் நிறுவனர் மனோகரன், திருச்சி சாரதாஸ் இயக்குநர் ரோசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் ஆலோசகர் பேராசிரியர் க. பழனித்துரை பேசியதாவது:
ஊழல் இல்லாத காரணத்தால்தான் தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர். தனித்தனியாகச் சேவை செய்பவர்களை ஒன்றிணைத்து மக்கள் இயக்கங்களை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஒப்பந்தக்காரர்களைவிட அரசு அதிகாரிகளை இந்த அரசு அதிகம் நம்புகிறது. கோவில்களுக்குச் செய்யும் திருப்பணிகளைப் போல, மக்கள் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். மேம்பாட்டு அரசியலில் தண்ணீர்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. வரும் டிசம்பர் 27-ம் தேதியன்று திருச்சியில் ‘தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு’ மாநில மாநாட்டை நடத்துவது.
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைத் திட்டமிட்டுப் புனரமைக்க மாவட்டவாரியாக 100 ஆளுமைகள் மற்றும் 100 செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து பொதுமக்களை அதில் பங்கேற்கச் செய்வது. நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை குடிமராமத்து முறையில் மேற்கொள்ளவும், பொதுமக்கள் தங்களது சொந்த உபகரணங்களை தாமாக முன்வந்து வழங்கி உதவவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 27 மாவட்டங்களிலிருந்து 108 நீர்நிலை செயற்பாட்டாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுப்ரமணியம் மற்றும் பெருமாள் ஆகியோர் நீர்நிலைகளைப் புனரமைப்பது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான வரவேற்பை ‘தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு’ பொறுப்பாளர் மோகனசுந்தரம் வழங்க, இணைப் பொறுப்பாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
