Trending News Tamil News Website In Trichy

திருச்சி செம்பட்டு பகுதியில் ஒரே நாளில் அரங்கேறிய போலிப் பத்திரப்பதிவு மோசடி- ஆவணங்களை ரத்து செய்யக் கோரி கோட்டாட்சியர் அலுவலக அமைதி பேச்சு வார்த்தையில் மக்கள் கோரிக்கை

0

திருச்சி 15.10.2026

திருச்சி செம்பட்டு பகுதியில் பெரும் நில மோசடி-150-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை அபகரிக்க முயற்சி – போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டம்

திருச்சி கிழக்கு வட்டம், என்.எம்.டி. நகர் மற்றும் செம்பட்டு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 150-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயலும் நில மாஃபியா கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு பகுதியில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக, வாய்மொழி வக்பாக வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றன.

இப்பகுதியில் தற்போது பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோயில்களுடன் கூடிய குடியிருப்புப் பகுதி உருவாகியுள்ளது. இப்பகுதியில் சுமார் 764 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்களை ஒரே இரவில் வீடுகளை காலி செய்யச் சொல்லி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மாபெரும் நில மோசடி நடந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வீடுகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ள 5.37 ஏக்கர் நிலத்தை, எந்தவொரு கள ஆய்வும் செய்யாமல் தரிசு நிலம் அல்லது குளம்,ஏரி போன்ற பகுதியாகக் காட்டி முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாகப் பதிவுகள் செய்யும் அதிகாரி விடுப்பில் இருந்த ஒரு நாளைப் பயன்படுத்தி, ஜமால் முகமது கல்லூரியின் இயக்குனர் காஜா நஜிமுதீன் என்பவரால் காசீம் என்பவருக்கு இந்தப் பத்திரப் பதிவு ஒரே நாளில் அவசரகதியில் முடிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலோடு சேர்ந்துள்ள சிறிய பகுதியை மட்டும் காட்டிவிட்டு, அருகில் மக்கள் வாழும் பல ஏக்கர் நிலத்தை வேறு சில நபர்களின் (சரவணகுமார், வினோத், முத்துசாமி போன்றோர்) பெயருக்கு மாற்றித் தரும் லஞ்ச ஊழல் மற்றும் நில மாஃபியா வேலைகள் அரங்கேறியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய சட்டத்தின்படியும், 1995 வக்பு சட்டத்தின்படியும் வாய்மொழி வக்பாகக் கொடுக்கப்பட்ட சொத்தை வாரிசுதாரர்கள் மாற்ற முடியாது. இருப்பினும், வாரிசுதாரர்களில் ஒருவரைக் கொண்டே இந்த மோசடி அரேங்கேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில், நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் தரப்பில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கால அவகாசம் கோரப்பட்டதுடன், போலிப் பத்திரங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள் தரப்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை வேண்டும்.

அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றிப் பெறப்பட்ட இந்த போலிப் பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக  மிகப்பெரிய அளவில் சட்டரீதியான மற்றும் நேரடிப் போராட்டங்களை முன்னெடுக்க ஊர் மக்கள் தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.