Trending News Tamil News Website In Trichy

வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை நுழைவாயில் பகுதி பராமரிப்புப் பணிகள் எப்போது முடியும்? மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்யக் கோரிக்கை

0

திருச்சி 13.10.2026

திருச்சியின் மகத்தான வரலாற்று அடையாளமாகவும் பிரதான சுற்றுலாத் தலமாகவும் திகழும் மலைக்கோட்டை நுழைவுவாயில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், உள்ளூர் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.அண்மையில் மலைக்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் இயங்கி வந்த தரைக்கடைகளை அகற்றி மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை நுழைவாயிலையும், அதனையொட்டிய மதில் சுவர் மற்றும் நடைபாதைகளையும் சீரமைக்கும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இப் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அச்சுறுத்தும் தாங்குதளக் கம்பிகளும் – சீரற்ற நடைபாதைகள் பாதசாரிகளை அச்சுறுத்துகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கந்தன் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்திய மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், புனரமைப்புப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன. நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாரக் கம்பிகள் மற்றும் இரும்புக் குழாய்கள் வழிமுழுவதும் நீட்டிக்கொண்டிருப்பதால், நடந்து செல்லும் மக்களுக்கும் முதியவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், நடைபாதைகள் பெயர்க்கப்பட்டு இடிபாடுகளின் மிச்சங்கள் அப்படியே கிடக்கின்றன,”எனத் தெரிவித்தார். என்.எஸ்.பி. ரோடு மற்றும் மலைக்கோட்டை நுழைவாயில் பகுதிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், மிக முக்கிய வியாபாரக் மண்டலமாக விளங்கும் இப் பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெறுவது பொதுமக்கள் கொள்முதல் செய்வதையும், வணிகர்களின் வியாபாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பண்டிகைக் கால நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, இந்த சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாவட்ட வெளி மாநில வெளிநாட்டு பயணிகளை பெரிதும் கவரும் மலைக்கோட்டையும் தெப்பக்குளம் என் எஸ் பி ரோடு கோட்டை நுழைவாயில் ஆகிய பகுதிகள் தொன்மை மறாமல் பாதுகாப்புடன் பராமரித்து வருவது அரசின் கடமையாகும்.இத்தகைய பணிகளில் காலம் கடத்துவதும் பொதுமக்கள் அதிகளவில் பயணிக்கும் பகுதியில் தொய்வுடன் பணிகள் நடைபெறுவது நிர்வாகத்தின் செயல்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.