ஓடும் ரயிலில் லேப்டாப் திருட்டு- திருச்சி பாலக்கரை கூனி பஜார் குற்றவாளியை வளைத்த திருச்சி ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை
திருச்சி 11.10.2026
ஓடும் ரயிலில் லேப்டாப் திருட்டு- துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த திருச்சி இருப்புப் பாதை காவல்துறைக்கு பாராட்டு
சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற விரைவு ரயிலில், பயணியின் லேப்டாப் மற்றும் உடமைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தில் தொடர்புடைய திருச்சி மாநகரத்தைச் சேர்ந்த பல வழக்குகளில் தொடர்புடைய நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த திருவருட்செல்வன் (46) என்பவர், தனது மனைவியுடன் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு வண்டி எண் 12689 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் S7 பெட்டியில் (சீட் எண் 66, 67) சுற்றுலாவுக்காகப் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயில் நேற்று காலை (அக்டோபர் 10-ம் தேதி) திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவர்கள் வைத்திருந்த லேப்டாப் பை மற்றும் தோள்பையைத் திருடிச் சென்றுவிட்டார். அந்தப் பையில் லேப்டாப் மற்றும் துணிமணிகள் இருந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருவருட்செல்வன் அளித்த புகாரின்பேரில், திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி கவிதா வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், இன்று காலை 10:30 மணியளவில் வழி விடு முருகன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் ரயிலில் கைவரிசை காட்டியது உறுதியானது. கைது செய்யப்பட்டவர் கார்த்தி (வயது 26) தந்தை பரமசிவம், கோரிமேடு, கூனி பஜார், பாலக்கரை பகுதியில் வசிப்பவர் என்பது தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்தியிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. பின்னர், அவரை திருச்சி நீதிமன்றம் JM IV -ல் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் (அக்டோபர் 23 வரை) சிறையில் படைக்கப்பட்டார்.