டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்? -மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு
திருச்சி 4.10.2026
*காவிரி உரிமை பெறாவிட்டால் தமிழ்நாட்டைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும்- திருச்சியில் விவசாயிகள் எச்சரிக்கை*
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசு தவறினால், இந்திய கூட்டாட்சி அமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டைத் தனி நாடாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சென்னை மற்றும் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்படும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிட மறுத்துவிட்டது. இதனால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப்போன நிலையில், சம்பா சாகுபடியையாவது காப்பாற்ற ஒன்றிய அரசு தலையிட்டு நீரைப் பெற்றுத் தர வேண்டும்.கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட முயல்வதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
தென்னக நதிநீர் இணைப்பான கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்திற்கு உடனடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்திற்குத் தண்ணீர் பெற ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாட்டைத் தனி நாடாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
60 வயது நிறைவடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியத் தொகையை உயர்த்தி ரூபாய் 5,000 ஆக வழங்க வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி – குண்டாறு, காவிரி – அய்யாறு, மேற்குத் தொடர்ச்சி மலை நதிகள் இணைப்பு, சுரண்டை ஊத்துமலை – பெரியகுளம் இரட்டைக்குளக் கால்வாய் இணைப்பு மற்றும் மேட்டூர் – பஞ்சப்பட்டி ஏரி நீர் இணைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சிப்பம் ஒன்றுக்கு மூட்டைக்கு ரூபாய் 20 வழங்கி, ஒரே வாரத்தில் விவசாயிகளின் கணக்கில் பணத்தை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் இடைத்தரகர்களின் கமிஷன் சுரண்டலைத் தடுக்க முடியும். நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தால் வாரத்திற்கு இருவர் உயிரிழக்கும் அவல நிலை உள்ளது. பயிர்களும் பெருமளவில் சேதமடைகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், தலைநகர் சென்னை மற்றும் புதுடெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்களின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.