Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் கருவாடு லாரியில் கஞ்சா கடத்தல்: 22 கிலோ கஞ்சா, ரூ.50,000 ரொக்கம், 4 செல்போன்கள் பறிமுதல் – 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

0

திருச்சி 4.10.2026

கருவாடு லாரியில் ரூ.5 லட்சம் கஞ்சா கடத்தல் -சமயபுரம் அருகே 5 பேர் அதிரடி கைது

ஆந்திராவில் இருந்து கருவாடு லாரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சாவை, சமயபுரம் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் உள்ளூர் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி ஒன்றில் கருவாடு மூட்டைகளுக்கு இடையே சுமார் 50 கிலோ கஞ்சா ஏற்றப்பட்டு தமிழகத்திற்கு கடத்தப்பட்டுள்ளது. இதில் வழியிலேயே திண்டிவனம் பகுதியில் 27 கிலோ கஞ்சாவை இறக்கிவிட்டு, மீதி 22 கிலோ கஞ்சாவுடன் லாரி திருச்சி நோக்கி வந்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சமயபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார், திருச்சி – சமயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரியை மறித்து விசாரணை நடத்தியபோது, அதில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் லாரியை முழுமையாக சோதனை செய்தபோது, கருவாடு மூட்டைகளுக்கு நடுவே கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து லாரியிலிருந்த 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜோயல் (24) – புதுச்சேரி அரவிந்த் (31) – புதுச்சேரி காமராஜர் (29) – திருச்சி, ராம்ஜி நகர் ஒண்டிமுத்துகுமார் (46) – திருச்சி, ராம்ஜி நகர் இதயபாலன் (33) – கடலூர் என்பது தெரியவந்தது.

இதில் புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் திட்டமிட்டு ஆந்திராவிற்குச் சென்று கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. சமயபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில் முன்னிலையில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, 2 பல்சர் இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.