திருச்சியில் 6 ஏக்கர் கோவில் நிலத்திற்குப் போலி பட்டா- அதிகாரிகள் துணையோடு ரூ.100 கோடி சொத்து அபகரிப்பு – அறநிலையத்துறை மீட்டுத் தர கிராம மக்கள் கோரிக்கை
திருச்சி 22.09.2026
திருச்சி பஞ்சப்பூரில் 6 ஏக்கர் கோவில் நிலத்திற்கு போலி பட்டா- ரூ.100 கோடி சொத்து கபளீகரம்? – அதிகாரிகளின் துணிச்சலைக் கண்டித்து அறநிலையத்துறை மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வழிபட்டு வரும் அருள்மிகு அய்யனார் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.80 கோடி முதல் 100 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலம், அதிகாரிகளின் பின்னணியோடு முறைகேடாகத் தனிநபர்களுக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சப்பூர் கிராம மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
பஞ்சப்பூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அய்யனார் கோவில் நிலம் அருகிலுள்ள அருவாக்குடி கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாக அமைந்திருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் அடங்கல் பதிவுகளில் இன்னமும் இந்த நிலம் அதிகாரப்பூர்வமாக அருள்மிகு அய்யனார் கோவில் பெயரிலேயே நீடித்து வருகிறது. ஆனால், நிலத்தின் சந்தை மதிப்பு பல கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த நிலத்தின் பட்டா சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பஞ்சப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில், எங்கள் அய்யனார் கோவிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் உயர் அதிகாரிகளின் முன்னிலையிலேயே ஆவணங்கள் முறைகேடு செய்யப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நிலத்தைக் குறிவைத்து இந்த முறைகேடு நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள அதிகாரிகளையும் ஆக்கிரமிப்பாளர்களையும் அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையோடு கோவில் நிலம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டும் மக்கள் இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்து, ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்டுத் தரவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பஞ்சப்பூர் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.