Trending News Tamil News Website In Trichy

குதிரை பேர ஆட்சியை ஆதரிப்போமாம்.. ஆனா தேர்தலில் எதிர்ப்போமாம் – திருச்சியில் கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கமான புது விளக்கம்

0

திருச்சி- 13.09.26

நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி – சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் அறிவிப்பு

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஎம் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம்,

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் சிபிஐ(எம்.எல்) ஆகிய இடதுசாரி கட்சிகள் ஓரணியாக இணைந்து, இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம்.ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மற்றொரு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் களம் காணவுள்ளன.வரும் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.

தற்போதைய இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, மற்றும் தமிழக வெற்றிக் கழக கூட்டணி எனப் பல முனைப் போட்டிகள் நிலவுகின்றன.ஆனால், இடதுசாரி கட்சிகள் இந்த எந்தவொரு கூட்டணியிலும் இடம்பெறாமல், தனித்துவமாகத் தங்களது வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.இடைத்தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதால் தவெக ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல இந்த முடிவு திமுகவிற்கு சாதகமாகவும் அமையாது. தேர்தலில் சந்திக்கும் மூன்று கூட்டணிகளுக்கும் எதிரானது. தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியிலிருந்து இடதுசாரி கட்சிகள் வழங்கி வரும் ஆதரவு தொடரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக ஆட்சியின் கடந்த 120 நாட்களின் செயல்பாடுகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைக்க உள்ளோம். சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் ஜனநாயக மன்றமாகத் திகழ வேண்டும். இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போதும் மக்களின் குரலாகவே அங்கு செயல்பட்டு வருகிறார்கள்.இந்த இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்வதன் மூலம், சட்டமன்றத்தில் சாமானிய மக்களின் குரல் மேலும் வலுவடையும். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் ரீதியாக முற்றிலும் தவறானது அதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதே நேரத்தில் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பாஜக மறைமுகமாக ஆட்சி செய்வது போல் தமிழ்நாட்டில் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.இரண்டு தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மற்ற கட்சிகளிடம் கோரிக்கை வைப்போம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.