திருச்சி அமைச்சர் தொகுதியில் தொடர் மின்வெட்டு -ஸ்ரீரங்கம் சத்திரப்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து கடும் பாதிப்பு
திருச்சி 10.09.2026
அமைச்சர் தொகுதியில் தொடர் மின்வெட்டு- சத்திரப்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – திருச்சி-மணப்பாறை நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டை மற்றும் வடக்கு அரியாவூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, திருச்சி – மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் ஒரே நேரத்தில் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி – மணப்பாறை சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தமிழ்நாடு மின்வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என்றும், சீரான மின் விநியோகத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஸ்ரீரங்கம் தொகுதியானது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொகுதிக்குட்பட்ட பகுதியாகும். ஆளும்கட்சி அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே தொடர் மின்வெட்டைக் கண்டித்துப் பொதுமக்கள் வீதியில் இறங்கிச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.