Trending News Tamil News Website In Trichy

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு சாலைப் பணியாளர்கள் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம்

0

திருச்சி 18.08.2026

தமிழ்நாடு முதலமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு

சாலைப் பணியாளர்கள் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி கோட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் திருச்சி கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற வேண்டும்.மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை அரசே நேரடியாகச் செயல்படுத்த வேண்டும்.

கிராமப்புற இளைஞர்களைச் சாலைப் பணியாளர்களாகப் பணிநியமனம் செய்ய வேண்டும்.பணியின் போது உயிர்நீத்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும்.தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றமாக ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் நாளிலேயே இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது.

இவ்வியக்கத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி துவக்க உரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் பிரேம்குமார், மாவட்டப் பொருளாளர் சிவசங்கர் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கக் கோட்டச் செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் மலர்மன்னன், பிரான்சிஸ், இணைச் செயலாளர்கள் ரமேஷ், சண்முகசுந்தரம், தணிக்கையாளர்கள் சவுந்தர், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமான சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க கோட்டப் பொருளாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.