தீபாவளியன்று நள்ளிரவில் பயங்கரம் -திருச்சி சமயபுரம் அருகே 2 சிறுவர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை- 3 தனிப்படைகள் அமைப்பு
திருச்சி 9.11.2026
தீபாவளியன்று நள்ளிரவில் பயங்கரம் -திருச்சி சமயபுரம் அருகே 2 சிறுவர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை- 3 தனிப்படைகள் அமைப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தீபாவளி பண்டிகையன்று நள்ளிரவில் 2 சிறுவர்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராகுல் (17) மற்றும் ராஜாவின் மகன் விஷால் (17). உறவினரான இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகிலுள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கும்பல் அவர்களைப் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. இத்தாக்குதலில் விஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராகுலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவரும் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கொலை பழிக்குப்பழியா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
