திருச்சியில் அராஜகம் -இதுதான் முதலமைச்சர் தொகுதியின் லட்சணமா? – 40 நாட்களாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து சிங்காரத்தோப்பு மக்கள் பரபரப்பு பேட்டி
திருச்சி 24.09.2026
*திருச்சி சிங்காரத்தோப்பில் பரபரப்பு- முதலமைச்சர் தொகுதியிலேயே பாதுகாப்பு இல்லை? – மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை*
திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு செயல்பட்டு வரும் நியூ கோல்டன் மஹால் மண்டபத்தால் தங்களுக்குப் பல்வேறு இன்னல்களும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..

கடந்த 2024-ஆம் ஆண்டு நியூ கோல்டன் மஹால் திருமண மண்டபத்திலிருந்து சாக்கடை நீர் வழிந்து பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் ஓடியது. இது குறித்து மாநகராட்சியில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் கவுன்சிலர் முன்னிலையில் அந்த சாக்கடைப் பாதை முற்றிலும் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மண்டபத்தின் உரிமையாளரான வழக்கறிஞர் அபுதாகிர் என்பவர் அப்பகுதி பொதுமக்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அபுதாகிர் மற்றும் சிலர் ஆயுதங்களுடன் வந்து முதலமைச்சரிடமே நேரடியாக உத்தரவு வாங்கிவிட்டோம். மீண்டும் சாக்கடை நீரை இந்தப் பாதையில்தான் விடுவோம் எனக் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு நகலைக் கேட்டபோது அதைக் காண்பிக்க மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி மீண்டும் வந்த அபுதாகிர் பெண்களை ஆபாசமாகப் பேசி மிரட்டியுள்ளார். இது குறித்து 100 அவசர எண்ணிற்கு அழைத்ததைத் தொடர்ந்து வந்த காவலர் சிவக்குமார் என்பவரின் முன்னிலையிலேயே சுவரை உடைத்து தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்து சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் காவல்துறை இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், காவல் ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் த.வெ.க மாவட்டப் பொறுப்பாளர் தர்கா சௌகத் வரை மனு அளித்தும் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. காவல் ஆய்வாளரிடம் கேட்டால் உதவி ஆணையர் சீதாராமன் என்பவர்தான் வழக்கின் கோப்புகளை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர் வென்ற சொந்தத் தொகுதியிலேயே மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் உலவி வருவதால் பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் வாழ்கின்றனர். எனவே இது குறித்து காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.