ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி-டிசம்பர் 20-ல் சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்களின் வசதிக்காக அதிரடி முன்னேற்பாடுகள்
திருச்சி 10.11.2026
*ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிசம்பர் 20-ல் சொர்க்கவாசல் திறப்பு – மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!*
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ள இப்பெருவிழாவை முன்னிட்டு, விரிவான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தலைமையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் பொன்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள், அப்பகுதி வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை எவ்வித தொய்வுமின்றி சிறப்பாக நடத்துவது குறித்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தடையற்ற குடிநீர் விநியோகம், தற்காலிக மற்றும் நிரந்தர கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், வெளியூர்கள் மற்றும் உள்ளூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நிழற்குடைகள் அமைத்தல், பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்துதல், பக்தர்கள் வருகையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
