Trending News Tamil News Website In Trichy

குடோன் போல் மார்க்கெட், சமூக விரோதிகள் நடமாட்டம், உடைந்த கழிவறைகள் – அடிப்படை வசதிகள் செய்யத் திராணியற்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கேள்விகேட்டுத் தரைக்கடை காய்கறி வியாபாரிகள் கதறல்

0

திருச்சி 17.10.2026

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பெரியசாமி டவர் பின்புறம் அமைந்துள்ள மாநகராட்சி கார் பார்க்கிங் வளாகத்தில் இயங்கி வரும் தரைக் கடை வியாபாரிகளுக்கு உரிய முன் அறிவிப்பின்றி கடைகள் அகற்றப்பட்டதால் கடும் வாழ்வாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.

மழையில் நனைந்து காய்கறிகள் சேதமடைந்ததாகவும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கூறி வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி தரப்பில் ஒதுக்கப்பட்ட கட்டடப் பகுதி குடோன் போன்று அமைந்துள்ளதால் பொதுமக்கள் அங்கு சென்று காய்கறிகள் வாங்குவதற்குத் தயங்குவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாலை 7 மணிக்கு மேல் அப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், குறிப்பாக பெண்கள் கழிவறைகளின் கதவுகள் உடைந்து ஓட்டைகளுடன் எந்தவிதச் சுகாதாரப் பராமரிப்புமின்றி அலங்கோலமாகக் கிடப்பதால் வியாபாரிகள் உள்ளே செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வளாகத்திற்குள் வியாபாரம் இல்லாததால் மேயர் மற்றும் மண்டலக் குழுத் தலைவரின் அனுமதியைப் பெற்று காம்பவுண்டுக்குள் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் வெளியில் கடை நடத்தி வந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடைகள் இயங்காத காலங்களிலும்கூட கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்களின் வாடகையைத் தவறாமல் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அதிரடியாக அகற்றியுள்ளனர்.

அப்பொழுது மின் இணைப்பைத் துண்டித்ததுடன் வியாபாரிகள் அமைத்திருந்த தார்ப்பாய்களை கிழித்தெறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையில் நனைந்து காய்கறிகள் வீணானதுடன் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட தராசுகளும் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கண்ணீருடன் கூறினார்.

இதே வளாகத்தில் கடை நடத்தி வரும் குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் கேட் அமைத்துக் கொள்ளவும் தனிப் பாதை அமைத்துக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறும் வியாபாரிகள் ஒற்றை நபருக்காக மட்டும் மாநகராட்சி நிர்வாகம் சிறப்புச் சலுகைகள் வழங்குவது ஏன் எனத் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வியாபாரிகள் முன்பு போல காம்பவுண்டுக்குள் இடையூறின்றி வியாபாரம் செய்ய உரிய அனுமதியை மீண்டும் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் கடும் விபரீத முடிவுகளைத் தேடிக்கொள்ள நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து உடனடியாக அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.