திருச்சி பிரணவ் கேஸ்ட்ரோ சென்டர் சாதனை- முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முகாம்
திருச்சி 14.10.2026
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற தவறான எண்ணத்தைத் தகர்த்து ஏழை எளிய மக்களும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இத்தகைய உயர்தர சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த க்ளெனீகிள்ஸ் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் (Gleneagles Hospital, Sholinganallur, Chennai – A Fortis Network Hospital கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் புகழ்பெற்ற க்ளெனீகிள்ஸ் ஃபோர்டிஸ் மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சைகளில் முன்னணி வகிக்கிறது. இம் மருத்துவமனை சார்பில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 5 முதல் 6 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சேவைகளைத் திருச்சியிலுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை தோறும் இக்குழுவினர் திருச்சிக்கு நேரில் வந்து நோயாளிகளைப் பரிசோதித்து வருகின்றனர். திருச்சியிலிருந்து இதுவரை சுமார் 15 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் சிறிய குழந்தைகள் ஆவர்; இவர்களில் 3 பேர் ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மரபணு கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிரணவ் காஸ்ட்ரோ சென்டர் மூலம் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்படுகிறது.
மஞ்சள் காமாலை வந்த அனைவருக்குமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. கல்லீரல் முற்றிலுமாகச் செயல்படாமல் போகும் நிலைக்குத் தள்ளப்படுவோருக்கு மட்டுமே இது அவசியமாகிறது. வயிற்று வீக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றி கல்லீரல் முற்றிலும் பழுதாகும் கட்டத்தில்தான் இந்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆரம்பகட்டத்திலேயே நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமல், முறையான மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
வெளிநிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் இந்த சிகிச்சைக்கு, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முழுமையான தீர்வு கிடைக்கிறது. ஆரம்பகட்டப் பரிசோதனைகள், 10 முதல் 15 மருத்துவர்களின் உடற்தகுதிச் சான்றிதழ், அரசு ஒப்புதலுடன் செய்யப்படும் ஆபரேஷன் மற்றும் முதல் இரண்டு வருட மருந்துச் செலவுகள் உள்பட 20 லட்சத்திற்கும் அதிகமான மொத்தச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. மனித உடலின் அதிசயமான உறுப்பான கல்லீரல், தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. கல்லீரலில் பாதியை ஒருவரிடம் இருந்து தானமாகப் பெற்றால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அது முழுமையாக வளர்ந்துவிடும். அரசின் விதிகளின்படி ரத்த உறவுகளில் முதல் மற்றும் இரண்டாம் தர சொந்தங்கள் மட்டுமே உரிய ஆவணங்களின் சரிபார்ப்புக்குப் பிறகு கல்லீரல் தானம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டோரும் 50 வயதுக்குக் கீழ் உள்ளோரும், சர்க்கரை நோய் இல்லாத ஆரோக்கியமான நபர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். தானம் அளித்தவர்களின் கல்லீரலும் அடுத்த ஒரு மாதத்தில் இயற்கையாகவே முழு வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால் இது முற்றிலும் பாதுகாப்பானது என்று மருத்துவர் கதிரேசன் உறுதியளித்துள்ளார்.