Trending News Tamil News Website In Trichy

தவெக-வுக்கு முஸ்லிம் வாக்காளர்கள் முழு ஆதரவு என்பது தவறான தகவல் – ஜவஹருல்லா பேட்டி

0

திருச்சி 11.10.2026

*திமுக – பாஜக கூட்டணி என்பது அதீத கற்பனை* *தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்* – *திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி*

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்:-

அவர் பேசுகையில்:-தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகள், மத்திய–மாநில அரசுகளின் உறவு, நீட் தேர்வு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது, திமுகவும் பாஜகவும் கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக எதிரெதிர் நிலைப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக போராட்டங்களை நடத்தியதையும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும் சுட்டிக்காட்டினார். எனவே, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்பது கற்பனையான கருத்து என்றார். தமிழகத்துக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும் என்றும், மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மருத்துவக் கல்வியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.தமிழக அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது, குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் வழங்குவது உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதைத் தொடர வேண்டும் என்றும், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் கூறிய ஜவாஹிருல்லா, முஸ்லிம் வாக்காளர்கள் முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், நீண்டகால சிறைவாசிகள் விடுதலைக்காக திமுக ஆட்சிக் காலத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.