🚨உயிரைக் காக்க 178 கி.மீ. சீறிப்பாய்ந்த வாகனம்! சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை🚨
திருச்சி 2.09.2026
🚨 *178 கி.மீ. விரைந்த “கிரீன் காரிடார் மதுரையிலிருந்து சிறுவாச்சூருக்கு கொண்டு வரப்பட்ட இதயம் -புதுச்சேரி நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி புதிய வாழ்வு 🫀🚑
சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
அவரது இதயம், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 43 வயது நோயாளிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
மதுரையிலிருந்து புறப்பட்ட இந்த உயிர் காக்கும் இதயம், சுமார் 178 கி.மீ. தொலைவில் உள்ள சிறுவாச்சூருக்கு பசுமை வழித்தடம் மூலம் விரைவாகக் கொண்டு வரப்பட்டது.
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு. V. பாலகிருஷ்ணன், IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை, திருச்சி மற்றும் பெரம்பலூர் காவல்துறையினர் விரைவாகப் போக்குவரத்தைச் சீரமைத்து முழு ஒத்துழைப்பு அளித்தனர். காலை 10:28 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட வாகனம், தடைகளின்றி மதியம் 12:22 மணிக்கு மருத்துவமனையைச் சென்றடைந்தது.
இதயத்தைப் பெற்றுக்கொண்டவுடன், இருதய மற்றும் மார்பு இரத்த நாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தனர்.
உறுப்பு தானம் செய்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், சரியான நேரத்தில் கிரீன் காரிடார் அமைத்து உதவிய திருச்சி மண்டல காவல்துறையினருக்கும், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவிற்கும் நோயாளியின் குடும்பத்தினரும் மருத்துவமனை நிர்வாகமும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.