Trending News Tamil News Website In Trichy

இயற்கை வளங்களை சூறையாடும் கல் குவாரிகள்- நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆயிரக்கணக்கான யூனிட் கற்கள் மற்றும் மண் அள்ளப்படுவதாக கிராம மக்கள் வேதனை*

0

திருச்சி 21.08.2026

 *இயற்கை வளங்களை சூறையாடும் கல் குவாரிகள்- நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆயிரக்கணக்கான யூனிட் கற்கள் மற்றும் மண் அள்ளப்படுவதாக கிராம மக்கள் வேதனை*

*நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்து இயற்கை வளங்கள் பாதிப்பு*

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பகுதியில் உள்ள தும்பலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில்

தும்பலையை சுற்றியுள்ள சூராம்பட்டி, சேருவடி மற்றும் பாப்பாபட்டி ஆகிய கிராமங்களில் இயங்கி வரும் கல் குவாரிகளால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கு முன்பு சிறிய அளவில் நடைபெற்ற குவாரி பணிகள், தற்போது நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆயிரக்கணக்கான யூனிட் கற்கள் மற்றும் மண் அள்ளும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்றன.

பாறைகளை தகர்க்க வைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகளால் அப்பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வுகள் ஏற்படுகின்றன. ராட்சச போர்வல்கள் மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு மண் கழுவப் பயன்படுத்தப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்து மரங்கள் மற்றும் பயிர்கள் காய்ந்து போகின்றன. எனவே கல் குவாரிகளின் இயக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.பாசன மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கான நீர் வழித்தடங்களைச் சீரமைத்துத் தர வேண்டும். மேலும் கொல்லிமலையிலிருந்து புளியஞ்சோலை வழியாக ஐயாற்றில் வரும் உபரி நீரானது, கடலில் சென்று வீணாவதைத் தடுக்க வேண்டும். பைதாம்பாறை கிராமத்திலிருந்து தும்பலம் பாறை வரை சுமார் 2 கி.மீ தொலைவிற்கு வாய்க்கால் அமைத்து இணைத்தால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மாயனூரிலிருந்து முள்ளப்பாடி ஏரி வழியாக சிட்லாரைக்கு வரும் நீரை, பம்ப் செய்து சுமார் 8 கி.மீ தொலைவிற்கு கொண்டு சென்றால், ஐயாற்றின் நீர்வழித்தடங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் நிரம்பும். இதன் மூலம் சுமார் 100 கி.மீ சுற்றளவிலுள்ள விவசாய நிலங்கள் பயனடையும். தும்பலம் ஏரி மற்றும் சிட்லாரை ஏரி ஆகியவை கடந்த 40 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. இவற்றை உடனடியாகத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்ப் பற்றாக்குறையால் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து விபத்துகள் ஏற்படுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாகப் கிராம மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.