ரயிலில் 4 பவுன் நகை திருட்டு- திருச்சியில் வாலிபர் கைது – திருச்சி ரயில்வே காவல்துறை நடவடிக்கை
திருச்சி 10.10.2026
*ரயிலில் 4 பவுன் நகை திருட்டு- திருச்சியில் வாலிபர் கைது – திருச்சி ரயில்வே காவல்துறை நடவடிக்கை* ஜனசதாப்தி ரயிலில் பயணித்த மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய நபரை திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் வாங்கப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி அவர்களின் மனைவி பாப்பாத்தி (65). இவர் கடந்த 06.10.2026 அன்று தனது பேரனுடன் ஜனசதாப்தி விரைவு ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, தனது கைப்பையில் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று (09.10.2026) திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித்திரிந்த நபர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருச்சி பாலக்கரை காஜாபேட்டை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராம்குமார் (38) என்பதும், ரயிலில் நகையைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து ராம்குமாரைக் கைது செய்த காவல்துறையினர், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (JM IV) நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 23.10.2026 வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் திருமதி கவிதா அவர்கள் குற்றவாளியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.