Trending News Tamil News Website In Trichy

விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை பார்த்ததே இல்லை: பாண்டிங் புகழாரம்

0

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசியதாவது: விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார்.

இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க  விரும்புவார்.

உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா என யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.

விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும் இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4,000 ரன்களை குவிக்க வேண்டும்.

இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.
விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.